தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் 8 கோட்டங்களில் 3,274 ஓட்டுநர் உடன் நடத்துநர் (டிசிசி) பணியிடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364, விரைவு போக்குவரத்து கழகத்தில் 318, கோட்ட வாரியாக விழுப்புரம் 322, கும்பகோணம் 756, சேலம் 486, கோவை 344, மதுரை 322, திருநெல்வேலியில் 362 பணியிடங்கள் உள்ளன.
2025 ஜூலை 1-ம் தேதி 24 வயது பூர்த்தியடைவோர் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 18 மாத அனுபவம், முதலுதவி சான்று, பொதுப்பணி வில்லை, நடத்துநர் உரிமம் ஆகியவை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும். அரசு விதிப்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
பணியில் சேர தகுதி, விருப்பம் உள்ளவர்கள் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக ரூ.1,180 செலுத்தி மார்ச் இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.590 செலுத்த வேண்டும். ஏப்ரல் 21-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். எழுத்து, செய்முறை தேர்வுகள், நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு குறித்த விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகும்.