பாகிஸ்தான் நாட்டின் எம்.பி.யாக இருப்பவர் அஸாம் ஸ்வாதி. இவர் தன்னுடைய மனைவிக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருப்பதாகவும் அதில் தானும் தன் மனைவியும் இருக்கும் பெரும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதில் இடம்பெற்று இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் ராணுவத்தில் தளபதியாக இருப்பவர் கமர் ஜாவேத் பஜ்வா இதனை விமர்சித்ததை அடுத்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளராக இருக்கும் அசம் கான் ஸ்வாதி, கடந்த மாதம் கூட்டு விசாரணை அமைப்பால் (எஃப்ஐஏ) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்ட ஸ்வாதி, செய்தியாளர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிக் கூறி, கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் இவர்கள் குவெட்டாவுக்குச் சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றும், அரசில் இருப்பவர்களே தனது பிரச்னைகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தெரியாத எண்ணில் இருந்து தனக்கு வீடியோ அனுப்பியதாக அவரது மனைவி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். இதனிடையில் அந்த வீடியோ போலியானது, போட்டோஷாப் செய்யப்பட்டது என்றும் கூட்டு விசாரணை அமைப்பு மூலம் விளக்கம் அளித்துள்ளது.
இதை தொடர்ந்து அதனை கண்டித்துள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், “வலி, உணர்வு மற்றும் வேதனை அனுபவித்து வரும் ஸ்வாதியிடம் பாகிஸ்தான் சார்பில் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.