திருவள்ளூர் அருகே, திருமணமான இரண்டு ஆண்டுகளில், இளம் பெண் ஒருவர், தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த, மதன், நாகராணி என்ற தம்பதிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், நாகராணியை மாமியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கண்டபடி வசை பாடி வந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தான், நாகராணி அவருடைய மாமியார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து, நாகராணியின் மாமியார் வீட்டார் தரப்பிலிருந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், நாகராணி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு நடுவே, நாகராணி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து, பதறிப்போன அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், உடனடியாக நாகராணியின் உடல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட மருத்துவமனை முன்பாக, ஒன்று கூடி, போராட்டத்தில் குதித்தனர். அப்போது, அவர்கள், நாகராணியின் மாமியார் குடும்பத்தினர் மீது, கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தனர். மேலும் வரதட்சணை மற்றும் குழந்தை இல்லை என்று, நாகராணியை மாமியார் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.
இதற்கு நடுவே நாகராணிக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து, ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற உள்ளதாக தெரிகிறது. ஆகவே மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்த நாகராணியின் குடும்பத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், தவறு எங்கு நடந்திருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்ததை தொடர்ந்து, காவல்துறையினரின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நாகராணியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், போராட்டத்தை வாபஸ் வாங்கி, கலைந்து சென்றனர்.