சென்னை மெரினா கடற்கரையில் சுண்டல், பானிப்பூரி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷா என்ற இளம்பெண் நேற்று காலை சென்னை மெரினா கடற்கரைக்கு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு பொழுதை கழித்த மோனிஷா, கடற்கரையில் விற்கப்பட்ட பானிப்பூரி, சுண்டல், சோளம் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஏறிய மோனிஷா மற்றும் அவரது நண்பர்கள், திருவான்மியூருக்கு சென்றுள்ளனர். ரயில் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போதே திடீரென மோனிஷா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிய மோனிஷாவின் நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இவர், மெரினா கடற்கரையில் பானிப்பூரி, சுண்டல், சோளம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா? என்பது அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் வெளிவரும். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக ஷவர்மா சாப்பிட்டு உயிரிழப்பு, சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சிறுமி பலி, தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் பலி, பீட் ரூட் பொரியலில் எலி தலை, பிரியாணியில் பூரான் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வந்தன. அது போல் ஆங்காங்கே கெட்டு போன இறைச்சியை விற்பனை செய்ததாகவும் செய்திகள் வெளியாகி, அந்த கடைகளுக்கு உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து ஹோட்டல் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
கடற்கரையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் சுண்டல், பானிப்பூரி, பஜ்ஜி, மீன் வறுவல், நண்டு வறுவல், தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், ஐஸ்கிரீம், சோளம், உணவு பொருட்கள் என விற்பனை செய்யப்படுகிறது. கடற்கரைக்கு வரும் மக்கள் இதை வாங்கி உண்ணாமல் இருக்க மாட்டார்கள். எனவே, இங்கும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.