புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, சிலிண்டர் வாங்கியதற்கான பில் அவசியம்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முதலில் ஆதார் அட்டை அவசியம். முகவரிச் சான்றாக சிலிண்டர் வாங்கியதற்கான ரசீதை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களுக்குள் சிலிண்டர் எடுத்திருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டும் தேவைப்படும். இந்த ஆவணங்கள் இருந்தால்தான் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தனி நபர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது. ஆனால், 55 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் ரேஷன் கார்டு வாங்கலாம். புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களுடைய பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கிய பின்னரே புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அதற்கு திருமண அழைப்பிதழ் தேவைப்படும் அல்லது திருமண சான்றிதழ் இருந்தால் போதுமானது. நீங்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் சிலிண்டர் இணைப்பு வாங்க வேண்டும். தனியாக சிலிண்டர் இணைப்பு இல்லாவிட்டால் கார்டு கிடைக்காது.
அரசு இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க முடியும். நீங்களே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 20 நாட்களில் ஒப்புதல் கிடைத்துவிடும். அதேபோல, விண்ணப்பித்த 2 மாதங்களில் ரேஷன் கார்டு கிடைத்துவிடும். ரேஷன் கார்டு கிடைத்ததற்கான தகவல் குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.