பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர்; தமிழகம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலமாகும். அதன்படி மொத்தம் 49 நிறுவனங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் சமரச அலுவலர்கள் பேச்சுவார்த்தைகளின் மூலம் விலக்கிக் கொள்ளப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8,373 தொழிற்தாவாக்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 24 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் மற்றும் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய இணையவழி தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புத் துறை மூலமாக இதுவரை 309 மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2 லட்சத்து 49,392 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 71 அரசு ஐடிஐ.களில் உட்கட்டமைப்பு வசதிகள் டாடா டெக்னாலஜி உடன் இணைந்து ரூ.2,877 கோடியில் 4.0 தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்கள் அன்றாட பணி தொடர்பாக அதிகளவில் காலையில் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் ரூ.20.25 கோடியில் அமைக்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித் தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.