நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9ஆம் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது லாக்கரில் இருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதமாக ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த திருட்டு வழக்கு தொடர்பான தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அதிரடியாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண் ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். 60 பவுன் தங்க, வைர நகைகள் மட்டும் திருட்டு போனதாக புகாரில் கூறி இருந்தாலும், 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஈஸ்வரியின் திருட்டு இதோடு நின்றிருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஈஸ்வரியின் திருட்டு செயல்கள் குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மந்தைவெளியைச் சேர்ந்த ஈஸ்வரியின் கணவர் பெயர் அங்கமுத்து. கணவருக்கு பெரியளவில் வேலை எதுவும் இல்லாததால் ஈஸ்வரி கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். நல்ல பெண் போல நடித்து ஐஸ்வர்யாவிடம் நெருங்கி பழகி ஆரம்பித்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரி, எளிதாக வீட்டின் நகை லாக்கர் பெட்டியை திறந்து அவ்வப்போது நகையை திருடி கொண்டிருந்தார். இதனை அறிந்த கார் டிரைவரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ஏற்கனவே விலை உயர்ந்த வைர மோதிரம் திருட்டு போய், பின்னர் அது மீட்கப்பட்டது. இதனால் ஈஸ்வரி நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் வீடுகளிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.