தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்ப செய்த மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வினை நடத்த வேண்டும் என கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி இரவு 12 மணி வரையிலும் 4 லட்சத்து,7 ஆயிரத்த 45 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 3,34,765 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அதில் 2,098,56 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி இருந்தனர்.
மாணவர்கள் விருப்பம் தெரிவித்த கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று இணையதளத்தில் வெளியிட வேண்டும். கல்லூரிகளில் மாணவர்கள் ஒற்றைச்சாளர கலந்தாய்வு முறையில், இட ஒதுக்கீட்டினைப்பின்பற்றி சேர்க்க வேண்டும்.
முதல்கட்டக் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் மாணவர்களை நேரில் அழைத்து நடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் கம்ப்யூட்டர், திறன் மேம்பாடு உள்ளிட்ட பிற பாடப்பிரிவுகளிலும் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார்.