திருச்சி அருகே அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அமைதிக்கு பெயர் போன திருச்சியில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சார்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவரது மகன் கோபி வயது 32. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டிபன் ஆர்டர் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து டிபன் வாங்குவதற்காக வந்தார். அப்போது இவரை வழிமறித்த மூன்று நபர்கள் வெட்டி படுகொலை செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடும் என்றிருக்கிறார் கோபி. அவரை விடாது துரத்திய அந்த கும்பல் சுற்றி வளைத்து படுகொலை செய்தது.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர் கமலவேணி, திருவெறும்பூரின் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். கோபியின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரது குடும்பத்தினர் யாரும் இந்த கொலை தொடர்பாக புகார் செய்ய முன்வரவில்லை. பின்னர் காவல் துறையினர் சமரசம் பேசியதை தொடர்ந்து அவரது தாய் ஜீவாவிடம் இருந்து புகாரை பெற்றுக் கொண்டனர்.