கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த தகவல்களை சீனா மறைப்பதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன..

இந்நிலையில் கொரோனா வைரஸின் தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய அறிவியல் ஆராய்ச்சியை நிறுத்தி வைத்ததற்காக சீன அதிகாரிகளை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு தரவுகளை வெளியிடாததற்கு என்ன காரணம் என்பது குறித்து சீன அதிகாரிகளிடம் உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகவும் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.. மேலும் ஜனவரியில் ஆன்லைனில் கொரோனா தொடர்பான வெளியிடப்பட்ட பிறகு, தற்போது அந்த தகவல்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.. அந்த தகவல்களை சீனா நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது..
எனினும் ஜனவரி மாதம் வெளியிட்ட தரவுகளை வைரஸ் நிபுணர்களின் சர்வதேச குழு பதிவிறக்கம் செய்து ஆராய்ச்சியை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது. சீனாவின் வுஹான் ஹுவானன் கடல் உணவு மொத்த விற்பனை சந்தையில், சட்டவிரோதமாக வர்த்தகம் செய்யப்பட்ட ரக்கூன் நாய்களிடமிருந்து கொரோனா தொற்றுநோய் பரவ தொடங்கியிருக்கலாம் என்று அந்த தரவுகளில் இருந்து கண்டறிய முடிந்ததாக சர்வதேச குழு தெரிவித்துள்ளது.. மேலும் நிபுணர்கள் தங்கள் சீன சகாக்களுடன் பகுப்பாய்வில் ஒத்துழைக்க முன்வந்தவுடன், விஞ்ஞான தரவுத்தளத்திலிருந்து மரபணு வரிசை குறித்த தரவுகள் அகற்றப்பட்டதால், குழுவால் இறுதி முடிவை அடைய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது..
ரக்கூன் நாய்கள், நரி போன்ற விலங்குகள் கொரோனா வைரஸை பரப்புகின்றன என்று தரவுகளை ஆய்வு செய்த நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.. வுஹான் சந்தையில் இருந்த அந்த விலங்குகளின் டிஎன்ஏவும், புதிய கொரோனா வைரஸின் மரபணு வரிசையும் ஒரே மாதிரியாக இருந்தன என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சி வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே ரக்கூன் நாய், நரி போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுகுறித்து பேசிய போது ” கொரோனா தொடர்பான தரவுகள், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த தரவுகள் தற்போது இணையதளத்தில் இல்லை.. காணாமல் போன ஆதாரங்கள் இப்போது “உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.