‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்வதாகவும், ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம் என்றும், பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அமித்ஷா நேற்றைய தினம் அறிவித்தார். இந்நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆஞ்சியியோகிராம் பரிசோதனை முடிவுகள் எனது இதயம் பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. நான் நலமுடன் உள்ளேன். இன்னும் 30 ஆண்டுகளாவது அரசியலில் ஈடுபடும் ஆரோக்கியம் என்னிடம் உள்ளது” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று 2021 சட்டப்பேரவை தேர்தல் முதல் வலியுறுத்தி வருகிறேன். அது தான் இப்போது நடக்கிறது.
தேஜ கூட்டணி கடல் அலை போன்றது. நாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். இந்த தருணத்தில் தேஜ கூட்டணியில் தான் அமமுக தொடர்கிறது. அதிமுக கூட்டணிக்கு வந்ததால் அமமுகவின் நிலை என்னவாகும்?, ஓபிஎஸ் கைவிடப்பட்டாரா? என்றெல்லாம், தகவல்கள் பரவி வருகின்றன. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை. அதை ஏற்படுத்த சிலருக்கு பரந்த மனநிலை இல்லை. எனவே, ஓரணியில் திரள வேண்டும் என்று சொல்லிவந்தோம். ஒரு தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் ஓரணியில் ஒற்றைக் குறிக்கோளுடன் திரண்டுள்ளோம்” என்று பேசியுள்ளார்.