தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்திலிருந்து வானகரத்திற்கு வந்து சேர்ந்தார்.
செல்லும் வழியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பல்வேறு வகையில் அவருக்கு வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த செயற்குழு மற்றும் பொது குழு கூட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக உள்ள நிலையில் வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், முக்கிய முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. முதலில் செயற்குழு கூட்டம் தொடங்குகுறது. இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
உட்கட்சித் தேர்தலை நடத்துவது, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தொடர்பான தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி வியூகங்கள் அமைக்கும் அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கருதப்படுகிறது.
தேர்தலுக்கு தயாராவதில் அடுத்த 15 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த பொதுக்குழு அதிமுகவினரை உற்சாகப்படுத்தும் வகையில் இருக்கும் என கூறலாம். மக்களவை தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னாடி இம்புட்டு பெரிய வரலாறு இருக்கா..?