மக்களவையில் 2 உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் 33 % இடஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது. மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு பிறகு, உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்த நிலையில், நேற்று முன்தினம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
மக்களவையில் 2 உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்த மசோதா அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, வாக்கெடுப்பின்போது மசோதாவிற்கு ஆதரவு இல்லாததால் மக்களவையில் தோல்வி அடைந்தது. பின்னர் 1998ல் வாஜ்பாய் அரசில் இம்மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. 1999, 2002, 2003 ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசாங்கத்தால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
2008ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் 2009-ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010-ம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் 186-1 என்ற வாக்கில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு பாஜக தலைமையிலான மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.