தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 பெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தருமபுரி மாவட்டத்தில், மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000/- பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டு வடம், பார்க்கின்சன் மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரியில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் 30.12.2022 தேதிக்குள் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.