சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால், சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கூட்டங்கள் நடத்தப்பட்டு, சேவை துறையின் சார்பாக, இரண்டு மாத காலத்திற்கு சாலை வெட்டுப்பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அந்த விதத்தில், புதிதாக சாலை வெட்டுப் பணிகளை தொடங்காமல், ஏற்கனவே சாலை வெட்டுப் பணிகளை மிக விரைவாக முடித்து, சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக முன்னெடுக்கப்படும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. நெடுஞ்சாலை துறையின் சார்பாக, பூந்தமல்லி பிரதான சாலையில் முன்னெடுக்கப்படும் பணிகளை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3,877 சாலை பணிகள் முடிவடைந்துள்ளனர். நாள்தோறும் சராசரியாக 70 சாலை பணிகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பருவமழைக்கு முன்னதாக, இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து சாலை பணிகளும் முழுமையாக முடிவுக்கு வரும். அத்துடன்,ஏற்கனவே செய்யப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மிக விரைவாக முடிப்பதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.