காந்தி நகர் மக்களவைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமித்ஷா தற்போது வரை முன்னிலையில் நீடித்து வருகிறார்.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். குஜராத் மாநிலத்தில் இருக்கும் காந்திநகர் மக்களவை தொகுயில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா. அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சோனால் ராமன்பாய் பட்டேல் போட்டியிட்டுள்ளார். பிற கட்சிகளை சேர்ந்த 12 பேர் களத்தில் இருந்தாலும் அமித் ஷா, சோனால் பட்டேல் இடையே தான் போட்டி நிலவுகிறது.
காந்திநகர் தொகுதிக்கு மே மாதம் 7ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. கடந்த 1989ம் ஆண்டில் இருந்து காந்திநகர் தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ளது. முன்னாள் துணை பிரதமரான எல்.கே. அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி அது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அமித் ஷா. இதையடுத்து அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டிருக்கிறார்.
காந்திநகரில் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான GIFT சிட்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை துவங்கியதில் இருந்து தற்போது வரை அமித் ஷா முன்னிலை வகித்து வருகிறார்.