தலைநகர் டெல்லியில் 350 ரூபாய் பணத்திற்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஜந்து மஸ்தூர் காலனி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நேற்று இரவு 11 மணி அளவில் அந்தப் பகுதி வழியாக வந்து கொண்டு இருந்த இளைஞர் ஒருவரை வழிமறித்த சிறுவன் தனக்கு பணம் தருமாறு கேட்டு இருக்கிறான். இதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் எதிர்பார்க்காத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த இளைஞரை கொடூரமாக குத்தி கொலை செய்திருக்கிறான்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் அந்த இளைஞர் சரிந்ததும் அவரிடம் இருந்த 350 ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான் . இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் .
இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளைஞரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன் பணத்திற்காக இளைஞரை கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள சிறுவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.