காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையில் ட்விட்டரில் மும்மொழிக்கொள்கை தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. தற்போது, அண்ணாமலை தனது சமூக ஊடக பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் தனது எக்ச் பக்கத்தில், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் எந்த முக்கியமான மாற்றங்களும் ஏற்படாமல் உள்ளது. அதன்படி, தமிழக மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறும் எண்ணிக்கை ஏன் மோசமாகக் குறைந்தது? இதற்கு பதில் ஒரே ஒன்று.. பிரதமர் மோடியின் அரசு தமிழ்நாட்டை மற்ற பிற இந்தி பேச மாநிலங்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தேர்வுகளை வடமாநிலங்களின் வசதிக்கேற்ப மாற்றிவிட்டது.
இந்தியாவில் இருப்பது ஒரு மாநிலம், ஒரு இந்தி மொழி மட்டுமல்ல! தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பெங்கால், மகாராஷ்டிரா – எல்லா மாநிலங்களும் இதே விவகாரத்தில் மத்திய அரசால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், அண்ணாமலை, நீங்கள் முதலில் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ஏன் மத்திய பாஜக அரசு CSAT தேர்வு முறையில் மொழி மற்றும் சிக்கலான aptitude-based hurdle-களை உருவாக்கி, வடமாநில மாணவர்களுக்கு மட்டுமே பயன் தரும் மாதிரி மாற்றம் செய்தது?” என கேள்விகளை அடுக்கி இருந்தார்.
காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை தனது எக்ச் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ் மாணவர்கள் ஹிந்தி தெரியாததால்தான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாக காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
எனக்குத் தமிழ் நன்றாகவே தெரியும். நேற்று நீங்கள் வீடியோ மூலம் கூறிய பொய்யை மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் எழுது வடிவத்தில் கூறுவதால் அது உண்மையாகி விடாது. கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதுதானே நியாயமான சமூக நீதி. கடந்த பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமாக இல்லையா..? உங்கள் கூட்டணிக் கட்சி திமுகவுக்கும் வெட்கமாக இல்லையா? இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்?
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து திமுகவினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுகவைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.