குழந்தைகளுக்கு வித்தை காண்பிப்பது போல கயிறால் அடித்து கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு வித்தை காண்பித்தார் என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு நடந்த வன்கொடுமை தொடர்பாக தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு நன்றிகள், பாராட்டுகள்; ஏனென்றால், நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது என அவர் தைரியமாக புகார் அளித்ததற்கு பாராட்டுகள். இவ்வாறு பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால்தான், குற்றச் செயல்கள் நிகழாத வகையிலான நிலையை உருவாக்கித் தர முடியும்.
பெற்றோர் தயங்கும் நேரத்தில் சமூக நலத்துறையே முன்வந்து புகார் கொடுத்து வழக்கையே சமூக நலத்துறை நடத்திட வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சாதகமான மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்; அதற்கு ஏற்றார் போல் சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை செயல்பட வேண்டுமு் எனவும் அறிவுறுத்தினார். அன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் கவனிக்கப்படுகிறதா எனவும், குற்றம் நடந்திருப்பின் முதல் தகவல் அறிக்கை முறையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா, குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைந்துள்ளதா எனவும் முதலமைச்சர் அவர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை வழக்கில் 3 மணி நேரத்தில், சம்பந்தப்பட்டவர் கைது செய்யபட்டார், இனி அவருக்கு தகுந்த தண்டனை வாங்கி தரப்படும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடுமில்லை. சென்னை மாநகர காவல் ஆணையரும் இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். வெறும் வாயை மென்றுக் கொண்டிருந்த அதிமுகவும், பாஜகவும் இந்த ஒரு வழக்கு கிடைத்ததும் அவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
தூத்துக்குடி தூப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்க்கேடு, அப்படி நிர்வாகம் செய்தவர் எல்லாம் நம்முடைய தளபதியின் ஆட்சியை கேள்வி கேட்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை கூற நேரம் போதாது அப்படி ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தினார். பாஜக தலைவரோ செய்தியாளர்களை அழைத்து வித்தை காண்பித்து கொண்டு இருக்கிறார். குழந்தைகளுக்கு வித்தை காண்பிப்பது போல கயிறால் அடித்து கொண்டு செய்தியாளர்களுக்கு வித்தை காண்பித்தார் என்றார்.