பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கெட்-அவுட் ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் மத்திய அரசைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் உங்களை ‘Go Back Modi’ என்று துரத்தி அடித்தனர். மீண்டும் அதை தமிழக மக்களிடம் முயற்சி செய்தால், இந்தமுறை ‘Go Back Modi’ கிடையாது. இந்தமுறை தமிழர்கள் ‘Getout Modi’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கரூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் சரியான ஆளாக இருந்தால், அவர் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லட்டும். உதயநிதி வீட்டுக்கு வெளியே, பாலிடாயில் பாபு என்று போஸ்டர் ஒட்டிவிட்டு வருவேன், அவர் பேசும் அதே பாஷையில் நானும் பேசுவேன். அவருக்கு ஒரு உலகத் தலைவரை மதிக்கத் தெரியவில்லை. உதயநிதி ஒரு கத்துக்குட்டி” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதியிடம், அண்ணாமலை போஸ்டர் ஒட்டுவதாக பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சுவரொட்டி ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? மத்திய அரசிடம் கேட்ட நிதியை வாங்கித் தருவதற்கு துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள். பிரச்சினையை திசைத்திருப்ப பார்க்கிறார் என்றார்.
இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இன்று காசி தமிழ்ச் சங்கமம், கும்பமேளாவுக்குச் செல்கிறேன். அடுத்த வாரம் சென்னைக்கு செல்லவிருக்கிறேன். சென்னைக்கு நான் எப்போது செல்கிறேனோ, அண்ணா சாலையில் எங்கு வரவேண்டும் என்று திமுககாரர்கள் நாளையும், தேதியையும், இடத்தையும் குறிக்கட்டும். அண்ணா சாலைக்கு நான் வருகிறேன். நீங்கள் இடத்தை மட்டும் முடிவு செய்யுங்கள். நான் தனி ஆளாக வருகிறேன். பாஜக தொண்டர்கள் யாரும் என்னுடம் வரமாட்டார்கள். நீங்கள் திமுகவின் மொத்த படையையும், மொத்த காவல் துறையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள். நேற்று நான் பேசியதில் இருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை” என்று அவர் கூறி இருந்தார்.
திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ என்று டிரென்டிங் செய்துள்ளனர். ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என எக்ஸ் தளத்தில் இன்று பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக டிரென்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம் என கூறி இருந்தார். சொன்னதை போல அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கெட்-அவுட் ஸ்டாலின் என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தில் உள்ள இந்த திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.