தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவதில் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வழங்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில்; தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நகராட்சி மற்றும் அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை செய்தல், தகுதிக்கான பருவம் முடித்தல் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குதல் போன்ற நிர்வாக பணிகள் சார்ந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களால் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சில மாவட்டங்களில் மேற்காணும் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படுவதாகவும், குறிப்பிட்ட காலத்தில் உரிய ஆணைகள் வழங்கப்படவில்லை என்றும் நீண்ட காலதாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி நியமனங்கள் செய்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு நீண்ட நாட்களாக பணிவரன் முறை – தகுதிக்கான பருவம் முடிக்கப்படவில்லை என ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. எனவே சார்ந்த கூட்டார்க் கல்வி அலுவலர்கள் மேற்குறிப்பிட்ட பணிகளில் தனிக்கவனம் செலுத்தி, ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை செய்தல் தகுதிக்கான பருவம் முடித்தல், தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குதல் போன்றவற்றிற்கான கருத்துருக்களை பரிசீலனை செய்து அதற்கான ஆணைகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் உடனடியாக வழங்க வேண்டும்.
இந்நிகழ்வில் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கான பணியரன்முறை செய்தல், தகுதிக்கான பருவம் முடித்தல் , தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குதல் போன்றவற்றில் ஆணை வழங்க இயலாத நிலை இருப்பின் என்ன காரணத்திற்காக மேற்கண்டவற்றை செயல்படுத்த இயலாத நிலை உள்ளது என்பதை குறிப்பிட்டு விரிவான கருத்துருவினை சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெற்று அதனை தொகுத்து மாவட்ட அளவில் 24.11.2023 மாலை 5.00 மணிக்குள் இணை இயக்குநரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.