சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அபுஜ்மட் வனப்பகுதியில் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கையில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் புதன்கிழமை (மே 21) அதிகாலை நடந்தது.
நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தேடுதல் வேட்டையை மேற்கொண்டு, நக்சல்களை ஒடுக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் காட்டுப்பகுதியில் நக்சல் இயக்கத்தினரின் தீவிர நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு முக்கிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், நாராயண்பூர், தந்தேவாடா, பீஜாப்பூர் மற்றும் கொண்டாகாவ் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் (DRG) ஒருங்கிணைந்த முறையில் புதன்கிழமை அதிகாலை சோதனை நடவடிக்கையைத் தொடங்கினர். இதில் ஏற்பட்ட திடீர் மோதலில் குறைந்தது 27 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அபுஜ்மத் காட்டுப்பகுதி, ஆய்வு செய்யப்படாத, மிகவும் குழப்பமான நிலப்பரப்பாக இருக்கிறது. இது கோவா மாநிலத்தைவிட பரப்பளவில் பெரியது. நாராயண்பூர் மட்டுமல்லாது பீஜாப்பூர், தந்தேவாடா, காண்கேர் மற்றும் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்ட வரையிலும் பரவியுள்ளது. அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இப்பகுதி குறித்த முழுமையான தகவல் இல்லாத நிலையில் இது பெரும் சவாலாகவே உள்ளது.
இதற்குமுன் ஏப்ரல் 21 முதல் 21 நாட்கள் நீடித்த ‘பிளாக் ஃபாரஸ்ட்’ எனப்படும் பெரிய எதிர் நக்சல் நடவடிக்கை சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லை பகுதியில் நடைபெற்றது. அப்போது 31 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரும் உயிரிழந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.