மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, மேலும் 3 குழந்தைகள் இறந்ததால், பலி எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளது.
சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்..
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 குழந்தைகள் அடினோவைரஸ் காரணமாக உயிரிழந்தனர்.. 2 குழந்தைகள் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், 1 குழந்தை பி.சி ராய் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. இதன் மூலம் கடந்த 11 நாட்களில் அடினோ வைரஸால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்மாநில சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ , காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் குழந்தைகளை, குறிப்பாக இரண்டு வயது அல்லது அதற்குக் குறைவானவர்கள் அடினோவைரஸால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால், மருத்துவர்களுக்கு, குறிப்பாக குழந்தை நல மருத்துவர்களுக்கு, ஏற்கனவே அரசு சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.. அடினோவைரஸ் காரணமாக பெற்றோர் மத்தியில் பீதி நிலவி வரும் நிலையில், சுகாதாரத் துறை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடினோவைரஸ் அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகளுக்கு ஆரம்ப சிகிச்சையை உறுதி செய்வதற்காக சிறப்பு குழந்தைகள் பிரிவுகளுடன் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் சிறப்பு வெளிப்புற பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளன..” என்று தெரிவித்தார்..
அடினோவைரஸ் அறிகுறிகள் : சளி, காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், தொண்டை புண், நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, போன்றவை அடினோவைரஸின் பொதுவான அறிகுறிகளாகும்.. இந்த வைரஸ் தோல் தொடர்பு மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் காற்றில் பரவும். இதுவரை, வைரஸுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.
அடினோவைரஸ் வயிற்று பிரச்சனைகள், சளி, நிமோனியா என பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். இந்த வைரஸ் வயது வித்தியாசமின்றி யாரையும் பாதிக்கலாம்.. ஆனால் இது பொதுவாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது. எனினும் அனைவருமே அடினோவைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுதல் மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடியை அணிதல், இருமல் இருப்பவர்களிடமிருந்து சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..
நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள் அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது கீமோதெரபியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக இருக்கும்.. அத்தகைய நபர்கள் அடினோவைரஸால் பாதிக்கப்பட்டால் நிமோனியாவை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே அவர்களை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும்..