கூகுள் குரோம் (Google Chrome) உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராகும். கூகுள் குரோம் பிரவுசரை தினமும் மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.. பெரும்பாலான விஷயங்களை ஆன்லைனிலேயே செய்வதால், சில நேரங்களில் இணையத்தில் நமது முக்கியமான தகவலை வழங்க வேண்டியிருக்கும், மேலும் பிரவுசரில் போதுமான பாதுகாப்பு இல்லை என்றால், உங்கள் விவரங்களை ஹேக்கர்கள் திருடக்கூடும்… இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க, Google Chrome தனது பிரவுசருக்கான புதுப்பிப்புகளை அவ்வப்போது வெளியிடுகிறது.. ஆனாலும் ஒரு சில பயனர்கள், கூகுள் குரோமை அப்டேட் செய்யாமல் பழைய பதிப்பை இயக்குகிறார்கள்.

இந்நிலையில் கூகுள் குரோம் பயனர்களுக்கு இந்திய அரசு ‘ஹை ரிஸ்க்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தச் சிக்கலை நீங்கள் புறக்கணித்தால், வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம்.. ஏனெனில் ஹேக்கர்கள் வங்கி விவரங்கள், பிறந்த தேதி, முகவரி மற்றும் பல உள்ளிட்ட உங்கள் முக்கியமான தகவல்களை எளிதாகத் திருடலாம் என்று அரசு எச்சரித்துள்ளது..
நீங்கள் Google Chrome இன் பழைய பதிப்பை இயக்குகிறீர்கள் என்றால், Google Chrome பிரவுசரில், பல பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதால், 110.0.5481.77/க்கு முந்தைய Chrome பிரவுசர் பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) கூகுள் குரோமில் சில பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது..இதனால் சைபர் குற்றவாளிகள், தன்னிச்சையாக முக்கியமான தகவல்களை அணுக முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.. எனவே கூகுள் குரோம் பிரவுசரை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
Google Chrome பிரவுசரை எவ்வாறு புதுப்பிப்பது..?
- Google Chrome பிரவுசரை திறக்கவும்.
- மேல் வலது மூலையில் உள்ள ‘மூன்று-புள்ளி’ ஐகானைக் கிளிக் செய்யவும்.
- மெனுவிலிருந்து, Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
- பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள About Chrome விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- புதுப்பிப்பு கிடைத்தால், புதுப்பிப்பைக் கிளிக் செய்யவும்.
- பிரவுசரை மீண்டும் துவக்கவும்.