கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கர்நாடக அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கேரளாவின் எல்லையோர மாவட்டங்களான குடகு, தட்சிண கன்னடா, சாம்ராஜநகரா மற்றும் மைசூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக கர்நாடகாவிற்குள் நுழையும் இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தின் காழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அண்டைய மாநிலங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 4 நபர்களுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பரவுவதைத் தடுக்க கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.