ESIS மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ESIS என்பது அரசு வழங்கும் காப்பீடு திட்டம் ஆகும். மாதம் ₹21,000 வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் ESI திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இந்தியாவில் உள்ள ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டம் (ESI) நோய், மகப்பேறு, இறப்பு மற்றும் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குகிறது.
இந்த நிலையில்தான் ESIS மற்றும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ESIS திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள்.. AB-PMJAY திட்டத்தின் கீழும் பயன் பெற முடியும் வகையில் மாற்றம் கொண்டு வர உள்ளனர்.
இன்சூரன்ஸ் மாற்றம்: இது போக ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவை (AB PM-JAY) எனப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் என்ன மாதிரியான வருமானம் வாங்கினாலும் , இந்த இன்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கு அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கவர் ஆகும். முன்னதாக, AB PM-JAY திட்டத்தின் கீழ் 40% மக்கள் மட்டுமே பயன் அடைந்தனர். இந்த திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது, இந்த விரிவாக்கம் மூலம் கூடுதலாக 6 கோடி நபர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நாடு முழுக்க 4.5 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளனர்.