உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் பெயரில் புதிய மோசடிகள் நடைபெறுவதாக அந்நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது.
போலியான யூடியூப் மின்னஞ்சல் ஐடி மூலம் பலருக்கு மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும், அது போன்ற மின்னஞ்சல்களில் கொடுக்கப்பட்டுள்ள எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.. மேலும், மின்னஞ்சலில் நீங்கள் பார்க்கும் எந்த இணைப்புகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பயனர்களை எச்சரித்துள்ளது.
no-reply@youtube.com ஐடியிலிருந்து மக்கள் மோசடி மின்னஞ்சல்களைப் பெறுகிறார்கள் என்று யூ டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்த சைபர் தாக்குதல்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், ஃபிஷிங் தாக்குதலால் நீங்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க உதவும் டிப்ஸையும் பகிர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வ சேனல் அல்லது புகழ்பெற்ற நிறுவனத்திடமிருந்து கூறி போலி மின்னஞ்சலை அனுப்பி பிஷிங் தாக்குதல் நடத்தப்படுகிறது. கடவுச்சொற்கள் போன்ற ரகசியத் தரவைத் திருடுவதே இந்த வகை சைபர் குற்றவாளிகளின் நோக்கமாகும்.. இதன் மூலம் அவர்கள் பணத்தைத் திருடுவதற்கு அல்லது தனிப்பட்ட தரவை அணுகுவதற்கு உதவும்.
உங்கள் YouTube கணக்கைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி, இரண்டு காரணி அங்கீகாரத்தை இயக்குவதே ஆகும்.. இதனால் சைபர் குற்றவாளிகளுக்கு, உங்கள் கணக்கிற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மட்டுமின்றி, OTP உறுதிப்படுத்தலும் தேவைப்படும்.