தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதனால் தமிழகத்தில் பாஜக குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். எனக்கு தோளோடு தோள் நிற்பவர் திருமாவளவன். தமிழ் இனத்துக்கு வலு சேர்க்கவே நாங்கள் இணைந்து நிற்போம். எங்களுக்கு இடையிலான உறவு தேர்தல் உறவு அல்ல. அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. பெரியாரையும், அம்பேத்கரையும் யாரேனும் பிரிக்க முடியுமா. அது போல தான் திராவிட முன்னேற்ற கழகமும், விடுதலை சிறுத்தைகளும்.
அம்பேத்கரை உயர்த்தி பிடிக்கும் இயக்கம் திமுக. பட்டியலின மக்களின் நலனை காக்கின்ற அரசு தான் நமது திராவிட மாடல் அரசு. சமூக நிதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைக்க வேண்டும் என்பதற்காக திருமாவளவன் வெல்லும் ஜனநாயக மாநாட்டினை கூட்டியுள்ளார். நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். ‘சர்வாதிகார பாஜக ஆட்சியை தூக்கி எறிவோம், ஜனநாயக அரசை நிறுவுவோம்’ என சபதம் ஏற்று, முக்கியமான 33 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார் திருமாவளவன். இந்த முழக்கம் எதிர்வரும் தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி.
தமிழகத்தில் பாஜக என்பது பூஜ்ஜியம். அதனால் தமிழகத்தில் பாஜக குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. தமிழகத்தில் மட்டுமே பாஜக-வை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுக்க பாஜக-வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இண்டியா கூட்டணி. ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்ற இலக்க கொண்டுள்ள கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டணியில் இணைந்து உள்ளது. பாஜக எனும் தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டணியாக இதை சுருக்கிவிட முடியாது என்றார்.