1000 ரூபாய் உரிமை தொகையை அனைத்து மகளிருக்கும் வழங்க வலியுறுத்தி இன்று முதல் தமிழ்நாடு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தான். இந்த திட்டம் எப்பொழுது தொடங்கப்படும் என்று அனைத்து எதிர்கட்சிகளாலும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. ஆனாலும் பல தகுதி வாய்ந்த மகளிருக்கு இந்த திட்டத்தில் பணம் வரவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
நிராகரிக்கப்பட்டோரில் பலரும் மேல்முறையீடு செய்து வரும் நிலையில், இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 18-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை அனைத்து மகளிருக்கும் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் போராட்டம் தொடங்குவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில், பொறுப்பாளர் வினோஜ் செல்வம் ஒருங்கிணைப்பில், இன்று முதல் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் சக்தியுடன் கண்டன ஆர்ப்பாட்டங்கள், பல்வேறு தேதிகளில் நடக்க உள்ளன.