உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக வினர் ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்ற இயக்குனர் சந்தான பாரதியின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதாலும், அதில் 6 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதாலும், திமுக, அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி 5 முறைக்கு மேல் தமிழகம் வந்து பிர்ச்சாரம் செய்து சென்றிருக்கிறார். அதேபோன்று நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் தினம் தினம் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று மாலை மதுரை வருகிறார். மாலை 6.15 மணிக்கு வருகை தரும் அவர், நேதாஜி சாலை தண்டாயுதபாணி முருகன் கோயில், ஜான்சிராணி பூங்கா, நகைக்கடை பஜார், ஆதீனம் வழியாக வாகன பேரணியில் ஈடுப்பட்டு வாக்கு சேகரிக்கிறார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக வினர் ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்ற இயக்குனர் சந்தான பாரதியின் படம் வைரலாகி வருகிறது. இந்து தொடர்பான புகைபடத்தை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமித்ஷா புகைப்படத்திற்கு பதிலாக சந்தானபாரதி புகைப்படத்தை வைத்து அடித்துள்ள பாஜக-வின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.