fbpx

போதை பொருட்கள் விற்பதை ஒரு தந்தை வேடிக்கை பார்க்கலாமா..? ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி…!

எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் போதையை ஒழிக்க வேண்டும்; போதைப் பழக்கங்களில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலியில், ‘’தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது முரண்பாடுகளின் மொத்த உருவம் ஆகும்.

ஒருபுறம் போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்கிறார்; ஆனால், செல்லும் பாதை நெடுகிலும் போதைப்பொருட்களின் விற்பனை தலைவிரித்தாடுகிறது; மாணவர்களைக் கூட மதுக்கடைகள் வா, வா என வரவேற்கின்றன. போதையை வெறுப்பவர்களைக் கூட போதைக்கு அடிமையாகும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை உறுதி செய்திருக்கும் தமிழக அரசு, போதையில் பாதையில் செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுப்பதை விட இரட்டை வேடம் இருக்க முடியாது.

மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் குடும்பத்தில் ஒருவனாக, தந்தையாக வேண்டுகோள் விடுப்பதாக கூறியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அவருக்கு ஒரே ஒரு வினா, எந்த தந்தையாவது மகன்கள் குடிக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பார்களா? ஆனால், நீங்கள் தமிழ்நாட்டில் 4774 மதுக்கடைகள், 1500 மனமகிழ் மன்றங்கள், 20 ஆயிரம் சந்துக் கடைகளை திறந்து வைத்திருக்கிறீர்களே? மகன்கள் செல்லும் பாதையில் முள்கள் கூட கிடக்கக் கூடாது என்பது தான் தந்தையர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், தமிழகத்தின் தந்தையாக திகழ வேண்டிய நீங்கள், எல்லா பாதைகளிலும் கஞ்சாவில் தொடங்கி எல்லா போதைப் பொருட்களும் விற்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கிறீர்களே? இது நியாயமா?

போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்று கூறியிருக்கிறீர்கள். உங்களின் இந்த விருப்பமும், அக்கறையும் உண்மையென்றால் உடனடியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள், போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள். இல்லாவிட்டால் தமிழ்நாட்டு இளைஞர்கள் செல்லும் பாதை இருட்டாகத் தான் இருக்கும்; அதைத் தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

English Summary

Can a father find fun in selling drugs? Anbumani Ramadoss question to Stalin

Vignesh

Next Post

நாளை முதல் 4 நாட்கள் வெளுத்து வாங்க போகும் மழை..!! - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Thu Oct 24 , 2024
The Meteorological Department has warned that there is a possibility of heavy rain in 19 districts of Tamil Nadu tomorrow

You May Like