காவிரியில் 15 நாட்களுக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு. 5000 கன அடி என்பது மிகவும் குறைவு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 29 அன்று கர்நாடகாவிற்கு அடுத்த 15 நாட்களுக்கு – செப்டம்பர் 12 வரை மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின் காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றதில் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த உத்தரவுகளை கர்நாடக அரசுக்கு ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனாலும் கர்நாடகா அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லி நேற்று நடைபெற்றது.
டெல்லியில் நேற்று இரண்டு மணி நேரம் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்தை தவிர, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்துகொண்டார், மற்ற மாநிலங்கள் ஆன்லைனில் கூட்டத்தில் பங்கேற்றன. தமிழகம் 24,000 கனஅடி நீர் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பிய நிலையில், கர்நாடகத்தின் நிலைப்பாடு 3,000 கனஅடியாக இருந்தது.
ஆனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை செப்டம்பர் 12 வரை மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள பில்லிகுண்டுலுவில் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 5000 கன அடி என்பது மிகவும் குறைவு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.