பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை.
உயிரி எரிபொருட்களுக்கான தேசிய கொள்கை – 2018, 2022 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்ள் அடிப்படையில், பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை 2030-ம் ஆண்டுக்கு முன்னதாக எட்டும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்புக்கான இலக்கு எட்டப்பட்டது. அதாவது நிர்ணயிக்கப்பட்ட 5 மாதங்களுக்கு முன்பாகவே இலக்கை எட்டி சாதனை படைக்கப்பட்டது.
எத்தனால் கலப்பு 2022-23-ம் ஆண்டில் 12.06% ஆகவும், 2023-24-ல் 14.60% ஆகவும், 2024-25-ம் ஆண்டில் 17.98% ஆகவும் அதிகரித்துள்ளது. எத்தனால் கலப்பை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பது குறித்து இதுவரை மத்திய அரசால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் எத்தனால் கலப்பதற்கான செயல் திட்டம் 2020-25- இன்படி 10% கலப்புக்கான வாகனங்களில் 20% எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்தினால் எரிபொருள் செயல்திறன் சற்று குறைந்து காணப்படுகிறது.
என்ஜின் மற்றும் ட்யூனிங் ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்களுடன், எரிபொருள் செயல்திறன் இழப்பைக் குறைக்க முடியும் என்று இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்திருந்தது. வாகன செயல்திறன், என்ஜின் பாகங்களின் தேய்மானம் அல்லது எத்தனால் கலந்த எரிபொருளுடன் என்ஜினுக்கான மசகு எண்ணெய் மோசமடைதல் ஆகியவற்றில் பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளபடி, உபரி கட்டணத்தில் உணவு தானியங்களைப் பயன்படுத்த உயிரி எரிபொருளுக்கான தேசியக் கொள்கை அனுமதி வழங்குகிறது. இதன்படி சோளம், மரவள்ளி, அழுகிய உருளைக்கிழங்கு, உடைந்த அரிசி போன்ற உணவு தானியங்கள், மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு தானியங்கள், மக்காச்சோளம், கரும்புச்சாறு & வெல்லப்பாகு, விவசாய கழிவுகள் (அரிசி வைக்கோல், பருத்தித் தண்டு, சோளக் கூடுகள், மரத்தூள், கரும்புச் சக்கை போன்றவை) போன்ற தீவனப் பொருட்களின் பயன்பாட்டை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது. கரும்புச் சாறு, அதன் உப பொருட்கள், மக்காச்சோளம் போன்றவற்றை எத்தனால் உற்பத்திக்காக அனுப்புவதால் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து, இதற்கான முடிவு மேற்கொள்ளப்படுகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.