சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் தீர்க்கவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமியை குளத்தில் இறக்குவதற்காக அர்ச்சகர்கள் எடுத்துச் சென்ற போது ஐந்து பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களும் 15 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.வணேஷ் (20) ,யோகேஸ்வரன் (23), ராகவன் (18),சூர்யா,(24), ராகவ் ((22) ஆகிய ஐந்து இளைஞர்களும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தவர்கள் ஆவர் .
இந்நிலையில் விபத்து நடந்த தர்மலிங்கேஸ்வரர் கோவில் குளத்தை சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிலால் மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 25 அடி ஆழமுள்ள குளத்தில் சேரும், சகதியும் அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கியவர்கள் சேருகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. இந்த விபத்தில் பலியான ஐந்து பேரின் உடலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.