சென்ற 7ம் தேதி அதிகாலை 2.52 மணி அளவில் திருநின்றவூர் டாட்டா ஸ்டீல் கம்பெனியிலிருந்து வந்த சரக்கு எஞ்சின் திருநின்றவூரிலிருந்து நெமிலிச்சேரிக்கு வருகை தந்து வந்திருந்தது. அப்போது சுமாரம் மூன்றடி நீளம் 20 கிலோ எடை மற்றும் 150mm குறுக்களவும் கொண்ட தென்னை மர துண்டு கிடந்திருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இன்ஜினை ஒட்டி வந்த லோகோ பைலட் மதியழகன் மற்றும் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பிரசாந்த் உள்ளிட்டோர் இன்ஜினை நிறுத்தி தண்டவாளத்தில் கடந்த தென்னை மரத்துண்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதன் பிறகு இன்ஜினை இயக்கிக்கொண்டு ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்து ஆவடி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் வழங்கிய புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சந்தீப் மித்தல் உத்தரவின் அடிப்படையில், காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில், சுற்றித்திரிந்த பாபு (42) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குடிபோதையில் தண்டவாளத்தின் மீது தென்னை மர துண்டை போட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாபு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்த தனிப்படையினருக்கு வெகுமதி வழங்கி, பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.