11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002 -ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் முதன்முதலில் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006 -ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடுப்பது ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன காரணமாக மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 6.5 லட்ச மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு சமிபத்தில் அறிவித்தது. நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தினை சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்கள் 6.5 லட்சம் பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
Also Read: பெண்களே… ரயில் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பு இல்லையா…? உடனே இந்த எண்ணுக்கு கால் செய்யவும்…