கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை அருகே நேற்று கடலூரிலிருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், வடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் அவ்வழியாக வடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்ற இருசக்கர வாகனத்தின் மீதும் பேருந்து மோதியுள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த விக்டோரியா, அந்தோணிசாமி என்பவரும், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த புவனகிரி வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஏழப்பன் மற்றும் தாமரைச்செல்வன், கோதண்டபாணி ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.