சென்னை பார்முலா-4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது உயிரிழந்த காவல் துறை உதவி ஆணையரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிவந்த சிவகுமார் (வயது 53) நேற்று (31.8.2024) பகல் சுமார் 12.45 மணியளவில் சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
காவல் துறை உதவி ஆணையர் சிவகுமார் மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணி புரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.