தமிழ்நாட்டில் ஒரு சொத்திற்கு பட்டா பெறுவது என்பது தற்போது மிகவும் எளிதாகிறது. இனி ஒரு நிமிடத்தில் ‘பட்டா’ வழங்குவதற்கான நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் 10 பைசா செலவு இல்லாமல் பட்டா வாங்குவது என்பது அவ்வளவு எளிதானதாக இருப்பது இல்லை. அதேபோல் பெரும் அலைச்சல் இருக்கும். விஏஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என அலைய வேண்டியிருக்கும். ஆனாலும், பட்டா என்பது உடனே கிடைப்பது இல்லை. பத்திரங்களை உடனே பதிவு செய்யும் மக்களுக்கு அதேபோன்று பட்டா வாங்க முடியாது ஏன் என்ற கேள்விகள் இன்று வரை இருக்கும்.
பத்திரப்பதிவு செய்தாலே பட்டாக்களையும் கையோடு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு அலைச்சல் இல்லாமல் ஆன்லைனிலேயே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு, ஆன்லைனிலேயே ஒரு சொத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் வருவாய்த்துறையில் உள்ள ஒரு சிலர் பட்டா வாங்குவதற்கு அதிகளவு கையூட்டு கேட்பதாகவும் புகார் எழுந்தது. இதை நேரடியாகவே கவனத்தில் எடுத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், கையூட்டு இல்லாமல் பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். மேலும், சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதன்படி, தானியங்கி முறையில் பட்டா மாறுதல் தொடங்கியுள்ளது. அதேபோல் பொதுமக்கள் எளிதாக பட்டா பெறும் வகையில் 3 நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் நடைமுறை என்னவென்றால், எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணையவழி சேவை மூலம் பட்டா பெறுவது தான். ஒரு நிலத்திற்கான பட்டா, வரைபடம் ஆகியவற்றை பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் எளிதாக பெற்று கொள்ள முடியும். இணையதளம் மூலமே பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
அடுத்தாக பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது வரிசைப்படி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சிறிய காரணங்களை சொல்லி மனுக்களை எக்காரணம் கொண்டும் நிராகரிக்க கூடாது. ஒருவேளை தவறாக மனுவை நிராகரித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோல் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் திட்டமும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. ஒரு சொத்தை பத்திரப்பதிவுத்துறை மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். அதாவது ‘ஒரு நிமிட பட்டா திட்டம்’ மூலம் பத்திரப்பதிவு செய்தவுடன் தானியங்கி முறையில் தானாக பட்டா மாற்றம் செய்யப்படுகிறது. இந்த திட்டப்படி, இனி வருவாய்த்துறைக்கு அனுப்பப்படாது. உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றத்திற்கு மட்டும் பொருந்தும். அதாவது சொத்தினை விற்பவர்கள் பெயரில் பட்டா இருந்து, அந்த பட்டாவில் உள்ள சொத்து அளவினை முழுமையாக அப்படியே வாங்குபவர்களுக்கு உடனடி பட்டா வழங்கப்படும். அதற்கான பணிகள் சுமார் 90% தற்போது முடிந்து விட்டது.
சில இடங்களில் சோதனை அடிப்படையில் தானியங்கி முறையில் ஒரு நிமிட பட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை முழு அளவில் செயல்படுத்தப்பட உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முதல்வரின் உத்தரவால் இனி லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்கும் நிலை உருவாகும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் பிரமுகர்கள்.
Read More : Kallakurichi | ’வாங்கி வெச்ச சாராயத்தை தூக்கிப் போட மனசு வரல’..!! பெண் உள்பட மேலும் 5 பேர் அனுமதி..!!