தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் விருப்பப்படி உயர் கல்வி படிப்பில் 3 விருப்பப் பாடங்களை வரும் 23-ம் தேதிக்குள் ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பள்ளிக்கல்வித் துறையில் இந்தாண்டு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயர் கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களது உத்தேசமான உயர் கல்வி விருப்பப் பாடம் மற்றும் அப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் இருப்பின் அவற்றுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘நான் முதல்வன்’ இணைய தளம் வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ‘நான் முதல்வன்’ இணைய தளத்தில் Login லிங்கை கிளிக் செய்து, பின் அதில் கோரப்பட்டுள்ள விவரங்களும், 3 விருப்பப் பாடப்பிரிவுகளையும் அவற்றுக்கு நுழைவுத்தேர்வுகள் இருப்பின் அவற்றையும் வரும் 23-ம் தேதிக்குள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், அனைத்து மாணவர்களும் விருப்பப் பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். இதனை, பள்ளி தலைமை ஆசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான உயர்கல்வி சார்ந்த பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் உயர் கல்வித்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்த தேதிகள், தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் மாநில திட்ட இயக்ககத்திலிருந்து பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து 12-ம் வகுப்பு மாணவர்களும் ‘நான் முதல்வன்’ இணையத்தில் பதிவு செய்வதால், எதிர் வரும் தங்கள் விருப்ப நுழைவுத் தேர்வுகளைத் தவற விடாமல் விண்ணப்பிக்கவும் அவற்றுக்கு தயார் செய்துகொள்ள முடியும். உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் 3 விருப்பப்பாடங்கள் தேர்வு செய்ததை உறுதி செய்ய வேண்டும்.
தங்கள் வகுப்பை சார்ந்த மாணவர்கள் விருப்பம் சார்ந்த படிப்புகள் குறித்து வகுப்பு ஆசிரியர்களுக்கு கூடுதலாக தெரிந்திருக்கும். ஆகையால் வகுப்பு ஆசிரியர்கள் அவரவர் பள்ளிகளில் உள்ள உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியருடன் இணைந்து இச்செயல்பாட்டினை செய்திடல் வேண்டும். எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடப்பாண்டில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியை பயில்வதில் தடையின்றி செல்வதற்கு உறுதி செய்திட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது