fbpx

செம்மொழி நாள் விழா.. மாணவர்களுக்கு பேச்சு போட்டி…! முதல் பரிசு ரூ.15,000 வழங்கப்படும்..! தமிழக அரசு அறிவிப்பு…!

செம்மொழி நாள் விழாவினை முன்னிட்டு 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான சூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கொண்டாடப்பெறவுள்ளது. செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி 03.06.2025-ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கான மாவட்டப்போட்டிகள் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 09.05.2025, வெள்ளிக்கிழமை அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.05.2025, சனிக்கிழமை அன்றும் சேலம் 8 அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறும். இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் https//tamilvalarchithuraitn.gov.in இணைய முகவரியிலோ அல்லது கியூஆர் குறியீட்டினைப் பயன்படுத்தியோ விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து போட்டியில் பங்கேற்கலாம். மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் போட்டி நடைபெறும் நாளில் நேரடியாக முதலில் வரும் 150 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

பள்ளிப் போட்டிகளில் அரசு, தனியார், பள்ளிகள், அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். கல்லூரிப் போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள், போட்டி நடைபெறும் நாளன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கப்பெறும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின்போது அறிவிக்கப்பெறும், செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை தொடர்புடைய தலைப்புகள் அளிக்கப்பெறும்.

போட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் தேநீர் மாச்சில், மதிய உணவு மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும். மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசுபெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப்பெறுவர். அதில் முதல் மூன்று பரிசுபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 03.06.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000, மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ. 7,000 வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

English Summary

Classical Language Day Celebration.. Speech Competition for Students…! First Prize Rs.15,000 will be given..! Tamil Nadu Government Announcement

Vignesh

Next Post

உலகில் உள்ள இந்த 5 நாடுகளிடம் ராணுவம் இல்லை.. யார் பாதுகாப்பு வழங்குவார்கள் தெரியுமா..?

Sat Apr 26 , 2025
Let's take a look at 5 countries that do not have an army.

You May Like