ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
ஹாங்காங்கில் சளி மாதிரிகள் பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் சமீபத்தில் ஒரு வருடத்தில் மிக அதிக அளவை எட்டியது. மே முதல் வாரத்தில் இறப்புகள் உட்பட கடும் நோய் பாதிப்பு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 31 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கொரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை இத்தொற்று வேகமாகப் பரவி வருவதை காட்டுகிறது.
இதுபோல் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இங்கு மே முதல் வாரத்தில் வைரஸ் பாதிப்பு முந்தைய வாரத்தை விட 28% அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்தது. இதுபோல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று, நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை மட்டுமே உறுதி செய்யப்படுவதாகவும், இது வழக்கமான எண்ணிக்கை எனவும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: PM Kissan : 31-ம் தேதி வரை அவகாசம்… இவர்களுக்கு எல்லாம் மத்திய அரசு வழங்கும் ரூ.6000 கிடைக்காது…!