14 கி.மீ வேகத்தில் மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் நேற்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து 130 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 160 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 14 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து இன்று முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மற்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24X7 மணி நேரமும் பணியாற்றிட முறைப்பணி முறையில் உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.