எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ரமேஸ்வர் டேலி பதிலளித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலை கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 144 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வருவாய் குறைவாக உள்ளவர்களுக்கு நடுத்தர மக்களுக்கும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 2 சமையல் எரிவாயு உருளைகளை வழங்கும் திட்டம் குறித்தும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் பயன்பெற்றவர்களின் விவரங்கள், அவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறதா? என்பது போன்ற கேள்விகளை திமுக எம்பி வில்சன் எழுப்பியிருந்தார்.

அதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ரமேஸ்வர் டேலி அளித்த பதிலில், ”சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்கள் மீது நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உள்நாட்டுப் பயன்பாட்டில் 58 சதவீதம் எல்பிஜியை இந்தியா இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தை விலை ஏற்ற-இறக்க நிலைக்கு ஏற்ப எல்பிஜி விலை நிர்ணயிக்கப்படுகிறது. 2021-22 காலகட்டத்தில் 7.52 கோடி பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளை நிரப்பப்பட்டுள்ளது. மேலும், அந்தத் திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு 14.2 கிலோ எரிவாயு உருளைக்கு ரூ.200 மானியமாக அறிவித்துள்ளது.
இந்த மானியம் 12 சிலிண்டர்கள் வரை ஓராண்டில் வாங்கினால் பொருந்தும். கொரோனா காலத்தில் இதே திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 14.17 கோடி இலவச எரிவாயு உருளைகள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.