டான்செட் தேர்வு மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டான்செட் தேர்வுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டான்செட் பொது நுழைவுத்தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா தேர்வில், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 750 ரூபாயும், இதர பிரிவினருக்கு 1,500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்தாய்வு கட்டணமும் அடங்கும். சீட்டா நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இரு தேர்வுகளுக்கும் tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதே தளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.