இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய 17 வயது கல்லூரி மாணவரை டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பாக 14 வயது சிறுமி ஒருவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த மாணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தனது மகள் யாரோ ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்ததாகவும் அதனை வைத்து அந்த நபர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் தன்மகள் கூறியதை அடுத்து காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார் அந்த தந்தை.
இந்த வழக்கில் உடனடியாக செயல்பட்ட காவல்துறையினர் அந்த சிறுமியை தொடர்பு கொண்ட நபரின் அடையாளங்களை ஐபி அட்ரஸின் மூலம் கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றனர். அந்த மாணவர் அங்கு இல்லாததால் அவரது தந்தையிடம் மகனை ஆஜர் படுத்தும் படி கூறிவிட்டுச் சென்றனர்.
வீட்டிற்கு வந்த மகனை காவல்துறையின் உத்தரவுப்படி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் படுத்தினார் தந்தை. அந்த மாணவரை கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் செய்த குற்றங்களை ஒத்துக் கொண்டார். மேலும் அவரிடம் இருந்து இதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன் மற்றும் சிம் கார்டுகளையும் கைப்பற்றியது போலீஸ்.
இந்தச் சிறுமி மட்டுமல்லாது பல்வேறு இளம் பெண்களின் புகைப்படங்களும் அந்த நபரின் செல்போனில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது காவல்துறை. இது தொடர்பாக பல்வேறு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த காவல்துறை அந்த நபரிடம் தீவிர விசாரணை செய்து வருகிறது.