சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் வேலை செய்த சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் 25ஆம் தேதி இருவரும் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆறாம் தேதி இவர்களது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த பட்டியல் சமூகத்தைச் சார்ந்த சிறுமியை வேலைக்கு வைத்தனர். கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது சம்பந்தமான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற சிறுமியை மருத்துவம் படிப்பதாக அழைத்து வந்து வீட்டு வேலைகள் செய்ய கொடுமைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர் . இதனைத் தொடர்ந்து தலைமறைவான ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா இருவரும் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி, எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சார்பாக ஆஜரான பெண் வக்கீல் தொடர்ந்த மனு மீதான விசாரணை கடந்த 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வக்கீல் சிறுமியின் படிப்பு செலவுக்காக ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பதால் ஊடகங்களில் இந்த வழக்கு சித்தரிக்கப்படுவதாகவும் தனது வாதத்தை முன் வைத்தார். எனவே இது போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “வீட்டில் வேலை செய்யும் பணி பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என சட்டத்தில் இருக்கிறது. ஆனால் சிறுமிக்கு இதுவரை எந்த சம்பளமும் கொடுத்ததாக தகவல்களில்லை. உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டிய இந்த வழக்கை ஆய்வாளர் தான் விசாரித்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய பின்புலம் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது”, என தனது வாதங்களை முன் வைத்தார்
இதனைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி ஜாமீன் கேட்டு பதிவு செய்யப்பட்ட மனுவை நீதிபதி நிராகரித்தார். ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கின்றனர். அவர்களது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.