ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து திமுக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்; பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் ஆளுநர்கள், பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு. ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
2023-ம் ஆண்டு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் ஆகிய சொற்களை உச்சரிக்கவில்லை. ’அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவை குறிப்பில் இடம்பெறும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்போதே நேருக்கு நேர் பதிலடி கொடுத்ததும், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவையில் இருந்து வெளியேறினார். 2024-ம் ஆண்டு ஆளுநர் உரையின் தொடக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்படுகிறது, தேசிய கீதம் பாடப்படுவது இல்லை எனக்கூறி உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ரவி. முந்தைய ஆண்டில் கூறிய அதே துருப்பிடித்த ஆயுதத்தை இந்த ஆண்டும் மீண்டும் தூக்கி கொண்டு வந்து, அவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார் ஆளுநர் ரவி.
தொடக்கத்தில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உரையை படிக்காமல் வெளியேறியதாக ஆளுநர் அளித்த விளக்கம் புல்லரிக்க வைக்கிறது. சில மாதங்கள் முன்பு பிரசார் பாரதியின் இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பங்கேற்ற போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டது. இப்போது தேசிய கீதம் முதலில் பாடவில்லை என சொல்லி மறைமுகமாக தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் எதிர்த்திருக்கிறார். அன்று தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்பதை விடுத்துவிட்டு பாடி நமது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தார்.
மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் இடையூறு செய்து வருகிறார். எத்தனை இடையூறுகள் வந்தாலும் மாநில உரிமை, மாநில சுயாட்சியை விட்டு கொடுக்காத மண் தமிழ் மண். மாநில உரிமை, மாநில சுயாட்சி, மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி போன்ற விவகாரங்களை எல்லாம் முன்வைத்து மத்திய அரசுடன் திமுக போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஏஜெண்ட்டாக செயல்படும் ஆளுநரை காப்பாற்றவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றும் வகையிலும் அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி வித்தைகளை காட்டிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவின் துரோகங்களை புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை தொடர்ந்து பத்து தேர்தல்களில் தோற்கடித்த பிறகும் தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அரசியலை எட்டப்பன் பழனிசாமி செய்து வருகின்றார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்றைக்குமே மாநில உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்களின் நலனையும் விட்டுக் கொடுக்காது. தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் இன்று காலை 10 மணியளவில் “மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என திமுக அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.