மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா முதன் முதலில் யாருடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது..?
மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதா முதன் முதலில் எப்பொழுது கொண்டுவரப்பட்டது அதன் பின்னணி என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
1996ம் ஆண்டு முதல் முறையாக தேவேகவுடா தலைமையிலான அரசில் இம்மசோதா கொண்டுவரப்பட்டது, வாக்கெடுப்பின்போது மசோதாவிற்கு ஆதரவு இல்லாததால் மக்களவையில் தோல்வி அடைந்தது. பின்னர் 1998ல் வாஜ்பாய் அரசில் இம்மசோதா மீண்டும் விவாதிக்கப்பட்டது. 1999, 2002, 2003 ஆண்டுகளிலும் வாஜ்பாய் அரசாங்கத்தால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
2008ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசில் மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் 2009-ல் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்ய, 2010-ம் ஆண்டு ஒன்றிய அமைச்சரவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. 2010-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் 186-1 என்ற வாக்கில் இம்மசோதா நிறைவேறியது. எனினும், மக்களவையில் மசோதா எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்போது இம்மசோதாவுக்கு பாஜக தலைமையிலான மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
33 சதவீத ஒதுக்கீட்டிற்குள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டையும் மசோதா முன்மொழிகிறது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது.