நாம் நமது குழந்தைகளுக்கு எதை சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ ஆரோக்கியமான வாழ்கையை கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. பணத்தை சம்பாதித்து விடலாம், ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டுவிட்டால் அதை மீட்டு எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் பலர், பல விதமான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளியில் படித்து வரும் சிறுவர்கள் பலர், மயங்கி விழுந்து உயிரிழக்கும் பல செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நொறுக்கு தீனிகளை அதிகம் சாப்பிடுவது தான். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாததால் அவர்களின் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பது இல்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் நீங்கள் கொடுக்க வேண்டியது கேழ்வரகு தான்.
ஆம், தாய்ப்பாலுக்கு பிறகு ஒரு சிறந்த உணவு என்றால் அது கேழ்வரகு தான் என்று டாக்டர் சிவராமன் கூரியுள்ளார். ராகியில் கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஆரோக்கியமான தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருப்பர்கள். ராகி எளிதாக ஜீரணமாவதால், அது உங்கள் குழந்தையின் பசியை அதிகரிக்கும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்றால் அது கால்சியம் தான். கால்சியம், வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் கல்சியம் அதிகம் நிறைந்த உணவுகளில் ஒன்று அது ராகி தான். ராகியில் கால்சியம் மட்டும் இல்லாமல், இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு இரத்த சோகையை வராமல் இருக்கும்.
மேலும், குழந்தைகளின் ஆரோக்கியமான எடைக்கு ராகி முக்கிய பங்கு வகிக்கிறது. ராகியில் இருக்கும் சிறந்த ஊட்டச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது. 6 மாதம் முடிந்த பிறகு, முதல் திட உணவாக நீங்கள் ராகியை கொடுக்கலாம். இதற்கு நீங்கள், 2 டேபிள் ஸ்பூன் ராகி மாவை, 1 கப் தண்ணீர் அல்லது பாலுடன் நன்கு கலந்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் வைத்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறி விட்டு, கஞ்சி பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதை குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல், பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களும் குடிக்கலாம். உங்களின் எடை அதிகரிக்க கூடாது என்று நீங்கள் நினைத்தால், தண்ணீர் சற்று அதிகம் சேர்த்து கூழ் பதத்தில் குடிக்கலாம்.